Thursday, December 27, 2007

சுயரூபம்

எல்கேஜி சிறுவனின் ஏபிசிடி கிறுக்கல்கள்
வட்டத் தலையுடன் குச்சிக் கால்களுடன்
வண்ண வண்ண பொம்மைகள்
குளிக்கப் போகுமுன் எடுத்து ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டுகள் சில
கணக்கு தெரியாத பால்காரியின்
கரிக்கோடுகள் ஆங்காங்கே
எண்ணெய் தேய்த்த பின் கையைத் தேய்த்த
அடையாளங்கள் சில
இவையனைத்தையும் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நான்கு ஆண்டுகளுக்கு முன் அடித்த
பச்சை டிஸ்டம்பரின் வண்ணம்
வெளி வார்த்தைகளால் பூட்டி வைத்தாலும்
வெளிப்பட்டு விடும் என்...
சுயரூபத்தைப் போலவே.
-ஜெ.நம்பிராஜன்

Saturday, December 15, 2007

நிழலின் அருமை

ஆட்டு மயிர் வாடையுடன் வந்த
அழுக்குச் சட்டைச்சிறுவன்
மேசையைக் கழுவிய தண்ணீரில் சிறிதே
மேலேயும் தெறிக்கிறான்
தண்ணீர் தருபவன்
தன் விரல் அழுக்கையும்
சேர்த்துத் தருகிறான்
ஆர்டர் செய்து
அரை மணி கழித்து வரும்
இட்லியோ அரைவேக்காடு
அன்பளிப்பை வாங்க மறுத்த
சிப்பந்தி சொல்கிறான்,
"ஒரு ரூபாய்க்கு
ஒரு சிகரெட் கூட கிடைக்காது"
மனைவியின் அருமை
ஓட்டலில் புரியும்
-ஜெ.நம்பிராஜன்