skip to main |
skip to sidebar
- ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்
முந்தைய நாளின் கனத்த நினைவுகள்
இமைகளின் மேலே அமர்ந்து கொள்கின்றன
- சன்னல் திரையை விலக்கினால்
முகத்திலடிக்கும் சூரிய ஒளியில்...
பொட்டல் வெளியும் ஒற்றைப் பனையும்
- எதிரில் தென்படும் மனிதர்களின்
முகங்களிலும் வெறுமை
மண்டிக் கிடக்கிறது
- தூரத்து வானத்தைப் பார்த்தபடி
நேரத்தை ஓட்டுவது எப்படி?
இரவு எப்போது வரும்
- இரவினில் இமையை மூடாமற்தடுக்கும்
சிந்தனைத் தூசொன்று...
நாளையையும் இவ்வாறே நகர்த்தியாக வேண்டும்
-ஜெ.நம்பிராஜன்
சமர்ப்பணம்:
சிதைந்த வாழ்வுடனும் சிதிலமடைந்த இல்லங்களிலும் வசிக்கும் ஈழத்தோழர்களுக்கு... இக்கவிதை
- ரீங்காரமிடும் மின்விசிறியின்
தாலாட்டுடன் உறங்குவது சுகமே
ஆனாலும் மொட்டை மாடியை
மனம் மறப்பதில்லை
- வானத்துக்கும் பூமிக்குமிடையே
மனிதன் எழுப்பிய சுவரைத்
தகர்த்தது போன்றதொரு மகிழ்வு
- உறக்கம் வராத பொழுதுகளில்
நட்சத்திரங்களுக்குள் ஓடி விளையாடலாம்
நிலவில் நிழலாய் இருப்பது
பாட்டியா, முயலா அல்லது
பாலூட்டும் அன்னையாயென ஆராயலாம்
- மொட்டை மாடி உறக்கம்
கனவுகளும் கவிதைகளும் நிறைந்தது
மின்விசிறி உறக்கத்தில்
நாளையைப் பற்றிய கணக்குகளிலேயே
கனவுகள் கலைந்து விடுகின்றன
- என் செய்வது?
அடுக்ககங்களுக்குள் அடைந்து விட்ட
என் இப்போதைய உறக்கங்கள் யாவும்
மொட்டை மாடியற்ற
மொட்டை உறக்கங்களாகி விட்டன
-ஜெ.நம்பிராஜன்