Monday, June 9, 2008

மொட்டை உறக்கங்கள்

  • ரீங்காரமிடும் மின்விசிறியின்
    தாலாட்டுடன் உறங்குவது சுகமே
    ஆனாலும் மொட்டை மாடியை
    மனம் மறப்பதில்லை
  • வானத்துக்கும் பூமிக்குமிடையே
    மனிதன் எழுப்பிய சுவரைத்
    தகர்த்தது போன்றதொரு மகிழ்வு
  • உறக்கம் வராத பொழுதுகளில்
    நட்சத்திரங்களுக்குள் ஓடி விளையாடலாம்
    நிலவில் நிழலாய் இருப்பது
    பாட்டியா, முயலா அல்லது
    பாலூட்டும் அன்னையாயென ஆராயலாம்
  • மொட்டை மாடி உறக்கம்
    கனவுகளும் கவிதைகளும் நிறைந்தது
    மின்விசிறி உறக்கத்தில்
    நாளையைப் பற்றிய கணக்குகளிலேயே
    கனவுகள் கலைந்து விடுகின்றன
  • என் செய்வது?
    அடுக்ககங்களுக்குள் அடைந்து விட்ட
    என் இப்போதைய உறக்கங்கள் யாவும்
    மொட்டை மாடியற்ற
    மொட்டை உறக்கங்களாகி விட்டன
    -ஜெ.நம்பிராஜன்

No comments: