Thursday, January 24, 2008

ஊடலுக்குப் பின்...

அழுது கொண்டிருந்தாய் நீ
அமர்ந்திருந்தேன் நான்
கொஞ்சகொஞ்சமாய்
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட
கண்ணீரில் 'நான்' கரைந்தோட
என்னைத் தொலைத்த நான்
உன்னை மறந்த நீ என
நாமானோம் நாம்.
-ஜெ.நம்பிராஜன்

Wednesday, January 9, 2008

அறியாத வயது

பள்ளி செல்லும் வழியில்
பழுதடைந்து நின்றது பேருந்து
வயல்வெளிச் சாலையில்
இறங்கி நின்ற மழலைகள்
பள்ளியை மறந்து பரவசமாயினர்
குயில்களின் கூவலோடு சேர்ந்தது
குழந்தைகள் குரல்
குழந்தைப் பருவம் தொலைத்த
நடுத்தர வயது ஆசிரியை
எரிச்சலோடு சொன்னாள்
"டோண்ட் டாக்".
-ஜெ.நம்பிராஜன்

Friday, January 4, 2008

ஹேப்பி நியூ இயர்

நள்ளிரவு கேளிக்கைகள்
மதுவிற்க்கு இலவச இணைப்பாக
சிற்றின்பத் தீண்டல்கள்
மிதக்கிறது...நம் பண்பாடு
நட்சத்திர விடுதி
நீச்சல் குளத்தில்
பிணமாக.
-ஜெ.நம்பிராஜன்

Thursday, December 27, 2007

சுயரூபம்

எல்கேஜி சிறுவனின் ஏபிசிடி கிறுக்கல்கள்
வட்டத் தலையுடன் குச்சிக் கால்களுடன்
வண்ண வண்ண பொம்மைகள்
குளிக்கப் போகுமுன் எடுத்து ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டுகள் சில
கணக்கு தெரியாத பால்காரியின்
கரிக்கோடுகள் ஆங்காங்கே
எண்ணெய் தேய்த்த பின் கையைத் தேய்த்த
அடையாளங்கள் சில
இவையனைத்தையும் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நான்கு ஆண்டுகளுக்கு முன் அடித்த
பச்சை டிஸ்டம்பரின் வண்ணம்
வெளி வார்த்தைகளால் பூட்டி வைத்தாலும்
வெளிப்பட்டு விடும் என்...
சுயரூபத்தைப் போலவே.
-ஜெ.நம்பிராஜன்

Saturday, December 15, 2007

நிழலின் அருமை

ஆட்டு மயிர் வாடையுடன் வந்த
அழுக்குச் சட்டைச்சிறுவன்
மேசையைக் கழுவிய தண்ணீரில் சிறிதே
மேலேயும் தெறிக்கிறான்
தண்ணீர் தருபவன்
தன் விரல் அழுக்கையும்
சேர்த்துத் தருகிறான்
ஆர்டர் செய்து
அரை மணி கழித்து வரும்
இட்லியோ அரைவேக்காடு
அன்பளிப்பை வாங்க மறுத்த
சிப்பந்தி சொல்கிறான்,
"ஒரு ரூபாய்க்கு
ஒரு சிகரெட் கூட கிடைக்காது"
மனைவியின் அருமை
ஓட்டலில் புரியும்
-ஜெ.நம்பிராஜன்

Friday, November 30, 2007

எது வெற்றி

கடைசி ஓவர்களைத் தவறாமல் பார்த்து விட
அலுவலகத்திலிருந்து அவசரப் பயணம்
சிக்னலில் ஒருபுறம்
கைக்குழந்தையுடன் பிச்சைக்காரி
மறுபுறம்
வசூல் வேட்டையில் சாலைக்காவலர்
இடதுபுறம் போகலாமென்றால்
மூத்திர வாடை அடிக்கும் முட்டுச்சந்துகளில்
டாஸ்மாக்கர்களின் சுகமான தூக்கம்
வலதுபுறமோ
தண்ணீர்க் குடங்களின் அணிவகுப்பு
நேர்ச்சாலையில்
குழிகளில் தடுக்கி விழாமல் வீடு சேர்ந்தால்
தங்கக்கோப்பை பரிசு நிச்சயம்
தட்டுத்தடுமாறி வீடு சேர்ந்ததும்
கதவு திறந்த மனைவி சொன்னாள்
"இந்தியா வின்"
-ஜெ.நம்பிராஜன்

Tuesday, November 27, 2007

சென்னபட்டணம்

வாழ வரும் அனைவரையும்
வாரி அணைக்கிறது சென்னை
நல்ல சம்பளக்காரனுக்கு
அப்பார்ட்மண்டில் வீடு
குறைந்த சம்பளக்காரனுக்கு
ஒண்டுக் குடித்தன வீடு
வேலை தேடுபவனுக்குக் கூட
மேன்சனில் குடித்தனம்
சிக்னல் அருகே வசிக்கிறான்
சென்னைத் தமிழன் மட்டும்
-ஜெ.நம்பிராஜன்