Tuesday, April 22, 2008

அனிமல் பிளானெட்

  • தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம்
    மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை
    மான்களும் மயில்களும் மட்டுமே
  • கணவன் வேறொருவரின் மனைவியுடன்
    நடனமாட
    மனைவி வேறொருத்தியின் கணவனுடன்
    சரசமாட
    மெய்மறந்த நேயர்கள் சொல்கிறார்கள்
    "கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கு"
  • முப்பது வயது மங்கையுடன்
    முகத்தில் மீசை முளைக்காத சிறுவன்
    விரச நடனமாட
    அவிழ்ந்து விழும் வகையில்
    ஆடை அணிந்த
    நடுவர் நடிகை சொல்கிறாள்
    "மச்சான்...ஐ லவ் யூ டா"
    -ஜெ.நம்பிராஜன்

Monday, April 14, 2008

காரண 'காரியம்'

"பிழைப்பு"
"காலத்தின் கட்டாயம்"
"வேறு வழியில்லை"
"நான் மட்டுமா..."
"உலக நியதி"
ஏதாவதொரு காரணம்
வைத்திருக்கவே செய்கிறார்கள்
தங்களை நியாயப்படுத்த
எல்லாத் துரோகிகளும்
-ஜெ.நம்பிராஜன்

Monday, April 7, 2008

பொங்கி வருகுது வியாபாரக் காவிரி

உலகத் தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
தமிழ்த் திரையுலகினரின்
மாபெரும் போராட்டம்
நேரடி ஒளிபரப்பு
இந்நிகழ்ச்சியை வழங்குவோர்
"மைசூர் சேண்டல் சோப்"
அதே நிறுவனத்தின்
கன்னட அலைவரிசையில்...
நம்ம கன்னட மக்களுகாகி
நம்ம கன்னட நட்சத்திரகளு
மகா ஓராட்டா
இ காரிகிரமமு நிமக்கே கொடவரு
"சென்னை மூவர்ஸ் & பேக்கர்ஸ்"
-ஜெ.நம்பிராஜன்
மொழிபெயர்ப்பு:
ஓராட்டா - போராட்டம்
இ காரிகிரமமு -இந்நிகழ்ச்சி
நிமக்கே- உங்களுக்கு
கொடவரு - வழங்குபவர்

Saturday, March 8, 2008

பிள்ளைத்தமிழ்

அழைக்கும் வேலைக்காரியிடம்
தாவும் குழந்தை
பார்ப்பதில்லை
சாதியும் பணமும்
தண்ணீரில் விளையாட சம்மதம்
குளிக்கச் சம்மதமில்லை
எங்கள் வீட்டு பாப்பாவுக்கு
ஒழுங்கற்றே இருந்தாலும்
அழகாய்த் தெரிகிறது
குழந்தை இருக்கும் வீடு
-ஜெ.நம்பிராஜன்

Saturday, February 23, 2008

காலம்

காலத்தைத் துரத்தித் தோல்வியுறுவதே

காலத்தின் கட்டாயம் போலும்

எது எப்படி இருப்பினும்

காலம் காலம் தாழ்த்தாது

தன் கடமையைச் செய்து விடுகிறது

காலத்தைக் கைப்பற்றுவதை விட

காலத்துடன் பயணிப்பதே எளிதாயிருக்கிறது

இருப்பினும்...

இழந்த நாட்களின் வலியிலும்

நிகழும் நாட்களின் பயத்திலும்

வரும் நாட்களின் கனவிலுமே

காலம் பெரும்பாலும் கழிந்து விடுகிறது

-ஜெ.நம்பிராஜன்

தப்பு

தப்பாமல் அவ்வப்போது
தப்புகள் செய்திருக்கிறேன் நான்
சிறு வயதில் செய்த தப்புகள்
சிரிக்க வைக்கும்
இப்போது நினைத்தாலும்
அப்போது செய்த தப்புகள்
வேடிக்கையாக செய்தவை
வேண்டுமென்றே பல தப்புகள்
இப்போதும் செய்கிறேன்
தப்புத்தப்பாக தப்பு செய்து
அகப்பட்ட தருணங்களும் உண்டு
அப்போதெல்லாம்
தப்பு செய்யக் கூடாது
என்று தோன்றியதே இல்லை
தப்புத் தப்பாக
தப்பு செய்யக்கூடாது
என்று மட்டுமே தோன்றியது
-ஜெ.நம்பிராஜன்

Thursday, February 7, 2008

முத்தம்

குழந்தையின் உதடுகளில்
எறும்பு கடித்தது போன்ற
பழுத்த உதடுகள் உனக்கு
இதழ் குவித்துப் பேசுகையில்
இதழ்களின் பாதைகளில்
பயணப்படும் என் மனது
இதழ்களின் இடைவெளியில்
இறுக்கப் பட்டிருந்தது
என் உயிர் மூச்சு
இன்னும் கனத்துக் கிடக்கிறது
நெஞ்சில்...
விட்டுப் பிரிகையில்
வெகு கவனமாக
எச்சில் படாமல்
நீ கொடுத்த
அந்த சம்பிரதாய முத்தம்
-ஜெ.நம்பிராஜன்