Sunday, July 13, 2008

நெல்லை எக்ஸ்பிரஸ்

  • ஆற்றுக்குளியலுடன் ஆசையாய்
    அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து
    தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
  • ஊர்வாசத்தின் மிச்சமாய்
    பயணப்பட்டன சில பூச்செடிகள்
    இரயிலில் என்னுடன்
  • எல்லாவற்றையும் பிரிக்கையில்
    இலவச இணைப்பாக வெளிப்பட்டது
    செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி
    இரயில் பூச்சி ஒன்று
  • பார்த்தறியாத பக்கத்து வீட்டு
    குழந்தைகளிடம் காட்ட வேண்டும்
    அதுவரைக்குமாவது உயிரோடிருக்க வேண்டும்
    அந்த பூச்சி
    -ஜெ.நம்பிராஜன்

Saturday, July 12, 2008

முத்தத்தின் நிறைகுடம் - துளி 1

எனது முதல் கவிதைத்தொகுப்பு 'முத்தத்தின் நிறைகுடம்' நூலிலிருந்து கவிதைகள் தொடராக பாவெளியில் வெளிவரும். முதல் பகுதி இங்கே...

  • உன் மேல் உதடு சூரியன்...
    கீழ் உதடு சந்திரன்
    ஒரே முத்தத்தில்
    உருக வைக்கும் வெயிலையும்
    உறைய வைக்கும் பனியையும்
    என் மேல் செலுத்துகிறாய்.
  • நீ விவசாயி
    நான் விளைநிலம்
    என்னுள் மோகத்தை விதைத்து
    முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
  • உன் ஒவ்வொரு முத்தமும்
    ஓர் முள்
    அதை...
    மறு முத்தத்தால் தான்
    எடுக்க வேண்டும்.
  • உன் இதழ் தேனடை
    அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
    தேனீக்கள் கொட்டுவதில்லை.
  • எத்தனை முறை குடித்தாலும்
    தீராத மதுப்புட்டி
    உன் இதழ்
    எவ்வளவு குடித்தாலும்
    ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
    நான்.

முத்தத்தின் நிறைகுடம்

ஜெ.நம்பிராஜன்

வெளியீடு: ஜெயஸ்ரீ பதிப்பகம்

Sunday, June 15, 2008

நாளை...?

  • ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்
    முந்தைய நாளின் கனத்த நினைவுகள்
    இமைகளின் மேலே அமர்ந்து கொள்கின்றன
  • சன்னல் திரையை விலக்கினால்
    முகத்திலடிக்கும் சூரிய ஒளியில்...
    பொட்டல் வெளியும் ஒற்றைப் பனையும்
  • எதிரில் தென்படும் மனிதர்களின்
    முகங்களிலும் வெறுமை
    மண்டிக் கிடக்கிறது
  • தூரத்து வானத்தைப் பார்த்தபடி
    நேரத்தை ஓட்டுவது எப்படி?
    இரவு எப்போது வரும்
  • இரவினில் இமையை மூடாமற்தடுக்கும்
    சிந்தனைத் தூசொன்று...
    நாளையையும் இவ்வாறே நகர்த்தியாக வேண்டும்
    -ஜெ.நம்பிராஜன்
    சமர்ப்பணம்:
    சிதைந்த வாழ்வுடனும் சிதிலமடைந்த இல்லங்களிலும் வசிக்கும் ஈழத்தோழர்களுக்கு... இக்கவிதை

Monday, June 9, 2008

மொட்டை உறக்கங்கள்

  • ரீங்காரமிடும் மின்விசிறியின்
    தாலாட்டுடன் உறங்குவது சுகமே
    ஆனாலும் மொட்டை மாடியை
    மனம் மறப்பதில்லை
  • வானத்துக்கும் பூமிக்குமிடையே
    மனிதன் எழுப்பிய சுவரைத்
    தகர்த்தது போன்றதொரு மகிழ்வு
  • உறக்கம் வராத பொழுதுகளில்
    நட்சத்திரங்களுக்குள் ஓடி விளையாடலாம்
    நிலவில் நிழலாய் இருப்பது
    பாட்டியா, முயலா அல்லது
    பாலூட்டும் அன்னையாயென ஆராயலாம்
  • மொட்டை மாடி உறக்கம்
    கனவுகளும் கவிதைகளும் நிறைந்தது
    மின்விசிறி உறக்கத்தில்
    நாளையைப் பற்றிய கணக்குகளிலேயே
    கனவுகள் கலைந்து விடுகின்றன
  • என் செய்வது?
    அடுக்ககங்களுக்குள் அடைந்து விட்ட
    என் இப்போதைய உறக்கங்கள் யாவும்
    மொட்டை மாடியற்ற
    மொட்டை உறக்கங்களாகி விட்டன
    -ஜெ.நம்பிராஜன்

Friday, May 30, 2008

குட்டிப் பிசாசு

1.
எல்லாப் பறவைகளையும் 'கா..கா' என்றும்
எல்லா விலங்குகளையும் 'தோ..தோ' என்றும்
எளிமைப்படுத்தி நீ அழைக்கையில்
குழந்தையாய் மாறி நிற்கிறது
சங்கத்தமிழ்.
2.
'...க்கம்' என்று நீ
கை கூப்பி வணங்குகையில்
வணக்கத்திற்கே 'வணக்கம்' போட்டதுபோல்
பெருமை கொள்கிறது.
3.
எப்போது நினைத்தாலும்
சிரிப்பாய் வருகிறது
சிவன் கோவில் நந்தியை
'..ம்பா' என்று நீ விளித்ததும்
'சாமியை அப்படி சொல்லப்படாது'
என்றபடி வந்த அய்யரின்
குடுமியை இழுத்ததும்.
4.
உன்னைக் கொஞ்சும் பெண்கள்
'அப்படியே அப்பா மாதிரி'
என்கிற போது
உன்னைக் காட்டிலும்
வெட்கம் நேரிடுகிறது
எனக்கு.
-ஜெ.நம்பிராஜன்

Tuesday, April 22, 2008

அனிமல் பிளானெட்

  • தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம்
    மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை
    மான்களும் மயில்களும் மட்டுமே
  • கணவன் வேறொருவரின் மனைவியுடன்
    நடனமாட
    மனைவி வேறொருத்தியின் கணவனுடன்
    சரசமாட
    மெய்மறந்த நேயர்கள் சொல்கிறார்கள்
    "கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கு"
  • முப்பது வயது மங்கையுடன்
    முகத்தில் மீசை முளைக்காத சிறுவன்
    விரச நடனமாட
    அவிழ்ந்து விழும் வகையில்
    ஆடை அணிந்த
    நடுவர் நடிகை சொல்கிறாள்
    "மச்சான்...ஐ லவ் யூ டா"
    -ஜெ.நம்பிராஜன்

Monday, April 14, 2008

காரண 'காரியம்'

"பிழைப்பு"
"காலத்தின் கட்டாயம்"
"வேறு வழியில்லை"
"நான் மட்டுமா..."
"உலக நியதி"
ஏதாவதொரு காரணம்
வைத்திருக்கவே செய்கிறார்கள்
தங்களை நியாயப்படுத்த
எல்லாத் துரோகிகளும்
-ஜெ.நம்பிராஜன்