Saturday, September 20, 2008

முத்தத்தின் நிறைகுடம் - துளி 2

  • உன் ஒவ்வொரு முத்தமும்
    விருட்சத்தின் விதை
    என்னுள் விழுந்து வளர்ந்து
    ஆயிரம் முத்தங்களாய்ப் பூக்கிறது
  • உன் உதடுகளுக்கு மத்தியில்
    இறுக்கப்பட்டிருக்கிறது
    என் உயிர் மூச்சு
    உன் முத்தத்தால்
    எனக்கு உயிர் கொடு
  • காற்று வெளியில்
    எனக்கான முத்தங்கள் மிதக்கின்றன
    உன் இதழ்களில் உயிர் பெற்று
    என் இதழ்களில் இடம் பெற
  • என் ஒவ்வொரு கவிதையும்
    உன் முத்தத்தில் தொடங்கி
    முத்தத்திலேயே முடிகிறது
  • இந்த பூமியின்
    முதல் முத்தம்
    யார் கொடுத்தது
    ஆதாமா...ஏவாளா?
    -ஜெ.நம்பிராஜன்

Sunday, August 17, 2008

ஊர் கூடி...

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உறுப்புக்கள் சிதறிக் கிடக்க
கேட்பார் எவருமின்றி
கடற்கரையோரம்
அனாதைப் பிணமாய்
பிள்ளையார்...
விநாயகர் சதுர்த்தி
கொண்டாட்டங்களுக்குப் பிறகு
-ஜெ.நம்பிராஜன்

வாய்ப்பு

தயாராகி விட்டார்கள்
சிறுவர்கள் பிச்சையெடுப்பதற்கும்
இளைஞர்கள் வசூல் வேட்டைக்கும்
அரசியல்வாதிகள் சர்ச்சைகளுக்கும்...
விநாயகர் சதுர்த்தி நெருங்குகிறது
-ஜெ.நம்பிராஜன்

Sunday, July 13, 2008

நெல்லை எக்ஸ்பிரஸ்

  • ஆற்றுக்குளியலுடன் ஆசையாய்
    அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து
    தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
  • ஊர்வாசத்தின் மிச்சமாய்
    பயணப்பட்டன சில பூச்செடிகள்
    இரயிலில் என்னுடன்
  • எல்லாவற்றையும் பிரிக்கையில்
    இலவச இணைப்பாக வெளிப்பட்டது
    செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி
    இரயில் பூச்சி ஒன்று
  • பார்த்தறியாத பக்கத்து வீட்டு
    குழந்தைகளிடம் காட்ட வேண்டும்
    அதுவரைக்குமாவது உயிரோடிருக்க வேண்டும்
    அந்த பூச்சி
    -ஜெ.நம்பிராஜன்

Saturday, July 12, 2008

முத்தத்தின் நிறைகுடம் - துளி 1

எனது முதல் கவிதைத்தொகுப்பு 'முத்தத்தின் நிறைகுடம்' நூலிலிருந்து கவிதைகள் தொடராக பாவெளியில் வெளிவரும். முதல் பகுதி இங்கே...

  • உன் மேல் உதடு சூரியன்...
    கீழ் உதடு சந்திரன்
    ஒரே முத்தத்தில்
    உருக வைக்கும் வெயிலையும்
    உறைய வைக்கும் பனியையும்
    என் மேல் செலுத்துகிறாய்.
  • நீ விவசாயி
    நான் விளைநிலம்
    என்னுள் மோகத்தை விதைத்து
    முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
  • உன் ஒவ்வொரு முத்தமும்
    ஓர் முள்
    அதை...
    மறு முத்தத்தால் தான்
    எடுக்க வேண்டும்.
  • உன் இதழ் தேனடை
    அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
    தேனீக்கள் கொட்டுவதில்லை.
  • எத்தனை முறை குடித்தாலும்
    தீராத மதுப்புட்டி
    உன் இதழ்
    எவ்வளவு குடித்தாலும்
    ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
    நான்.

முத்தத்தின் நிறைகுடம்

ஜெ.நம்பிராஜன்

வெளியீடு: ஜெயஸ்ரீ பதிப்பகம்

Sunday, June 15, 2008

நாளை...?

  • ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்
    முந்தைய நாளின் கனத்த நினைவுகள்
    இமைகளின் மேலே அமர்ந்து கொள்கின்றன
  • சன்னல் திரையை விலக்கினால்
    முகத்திலடிக்கும் சூரிய ஒளியில்...
    பொட்டல் வெளியும் ஒற்றைப் பனையும்
  • எதிரில் தென்படும் மனிதர்களின்
    முகங்களிலும் வெறுமை
    மண்டிக் கிடக்கிறது
  • தூரத்து வானத்தைப் பார்த்தபடி
    நேரத்தை ஓட்டுவது எப்படி?
    இரவு எப்போது வரும்
  • இரவினில் இமையை மூடாமற்தடுக்கும்
    சிந்தனைத் தூசொன்று...
    நாளையையும் இவ்வாறே நகர்த்தியாக வேண்டும்
    -ஜெ.நம்பிராஜன்
    சமர்ப்பணம்:
    சிதைந்த வாழ்வுடனும் சிதிலமடைந்த இல்லங்களிலும் வசிக்கும் ஈழத்தோழர்களுக்கு... இக்கவிதை

Monday, June 9, 2008

மொட்டை உறக்கங்கள்

  • ரீங்காரமிடும் மின்விசிறியின்
    தாலாட்டுடன் உறங்குவது சுகமே
    ஆனாலும் மொட்டை மாடியை
    மனம் மறப்பதில்லை
  • வானத்துக்கும் பூமிக்குமிடையே
    மனிதன் எழுப்பிய சுவரைத்
    தகர்த்தது போன்றதொரு மகிழ்வு
  • உறக்கம் வராத பொழுதுகளில்
    நட்சத்திரங்களுக்குள் ஓடி விளையாடலாம்
    நிலவில் நிழலாய் இருப்பது
    பாட்டியா, முயலா அல்லது
    பாலூட்டும் அன்னையாயென ஆராயலாம்
  • மொட்டை மாடி உறக்கம்
    கனவுகளும் கவிதைகளும் நிறைந்தது
    மின்விசிறி உறக்கத்தில்
    நாளையைப் பற்றிய கணக்குகளிலேயே
    கனவுகள் கலைந்து விடுகின்றன
  • என் செய்வது?
    அடுக்ககங்களுக்குள் அடைந்து விட்ட
    என் இப்போதைய உறக்கங்கள் யாவும்
    மொட்டை மாடியற்ற
    மொட்டை உறக்கங்களாகி விட்டன
    -ஜெ.நம்பிராஜன்

Friday, May 30, 2008

குட்டிப் பிசாசு

1.
எல்லாப் பறவைகளையும் 'கா..கா' என்றும்
எல்லா விலங்குகளையும் 'தோ..தோ' என்றும்
எளிமைப்படுத்தி நீ அழைக்கையில்
குழந்தையாய் மாறி நிற்கிறது
சங்கத்தமிழ்.
2.
'...க்கம்' என்று நீ
கை கூப்பி வணங்குகையில்
வணக்கத்திற்கே 'வணக்கம்' போட்டதுபோல்
பெருமை கொள்கிறது.
3.
எப்போது நினைத்தாலும்
சிரிப்பாய் வருகிறது
சிவன் கோவில் நந்தியை
'..ம்பா' என்று நீ விளித்ததும்
'சாமியை அப்படி சொல்லப்படாது'
என்றபடி வந்த அய்யரின்
குடுமியை இழுத்ததும்.
4.
உன்னைக் கொஞ்சும் பெண்கள்
'அப்படியே அப்பா மாதிரி'
என்கிற போது
உன்னைக் காட்டிலும்
வெட்கம் நேரிடுகிறது
எனக்கு.
-ஜெ.நம்பிராஜன்

Tuesday, April 22, 2008

அனிமல் பிளானெட்

  • தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம்
    மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை
    மான்களும் மயில்களும் மட்டுமே
  • கணவன் வேறொருவரின் மனைவியுடன்
    நடனமாட
    மனைவி வேறொருத்தியின் கணவனுடன்
    சரசமாட
    மெய்மறந்த நேயர்கள் சொல்கிறார்கள்
    "கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கு"
  • முப்பது வயது மங்கையுடன்
    முகத்தில் மீசை முளைக்காத சிறுவன்
    விரச நடனமாட
    அவிழ்ந்து விழும் வகையில்
    ஆடை அணிந்த
    நடுவர் நடிகை சொல்கிறாள்
    "மச்சான்...ஐ லவ் யூ டா"
    -ஜெ.நம்பிராஜன்

Monday, April 14, 2008

காரண 'காரியம்'

"பிழைப்பு"
"காலத்தின் கட்டாயம்"
"வேறு வழியில்லை"
"நான் மட்டுமா..."
"உலக நியதி"
ஏதாவதொரு காரணம்
வைத்திருக்கவே செய்கிறார்கள்
தங்களை நியாயப்படுத்த
எல்லாத் துரோகிகளும்
-ஜெ.நம்பிராஜன்

Monday, April 7, 2008

பொங்கி வருகுது வியாபாரக் காவிரி

உலகத் தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
தமிழ்த் திரையுலகினரின்
மாபெரும் போராட்டம்
நேரடி ஒளிபரப்பு
இந்நிகழ்ச்சியை வழங்குவோர்
"மைசூர் சேண்டல் சோப்"
அதே நிறுவனத்தின்
கன்னட அலைவரிசையில்...
நம்ம கன்னட மக்களுகாகி
நம்ம கன்னட நட்சத்திரகளு
மகா ஓராட்டா
இ காரிகிரமமு நிமக்கே கொடவரு
"சென்னை மூவர்ஸ் & பேக்கர்ஸ்"
-ஜெ.நம்பிராஜன்
மொழிபெயர்ப்பு:
ஓராட்டா - போராட்டம்
இ காரிகிரமமு -இந்நிகழ்ச்சி
நிமக்கே- உங்களுக்கு
கொடவரு - வழங்குபவர்

Saturday, March 8, 2008

பிள்ளைத்தமிழ்

அழைக்கும் வேலைக்காரியிடம்
தாவும் குழந்தை
பார்ப்பதில்லை
சாதியும் பணமும்
தண்ணீரில் விளையாட சம்மதம்
குளிக்கச் சம்மதமில்லை
எங்கள் வீட்டு பாப்பாவுக்கு
ஒழுங்கற்றே இருந்தாலும்
அழகாய்த் தெரிகிறது
குழந்தை இருக்கும் வீடு
-ஜெ.நம்பிராஜன்

Saturday, February 23, 2008

காலம்

காலத்தைத் துரத்தித் தோல்வியுறுவதே

காலத்தின் கட்டாயம் போலும்

எது எப்படி இருப்பினும்

காலம் காலம் தாழ்த்தாது

தன் கடமையைச் செய்து விடுகிறது

காலத்தைக் கைப்பற்றுவதை விட

காலத்துடன் பயணிப்பதே எளிதாயிருக்கிறது

இருப்பினும்...

இழந்த நாட்களின் வலியிலும்

நிகழும் நாட்களின் பயத்திலும்

வரும் நாட்களின் கனவிலுமே

காலம் பெரும்பாலும் கழிந்து விடுகிறது

-ஜெ.நம்பிராஜன்

தப்பு

தப்பாமல் அவ்வப்போது
தப்புகள் செய்திருக்கிறேன் நான்
சிறு வயதில் செய்த தப்புகள்
சிரிக்க வைக்கும்
இப்போது நினைத்தாலும்
அப்போது செய்த தப்புகள்
வேடிக்கையாக செய்தவை
வேண்டுமென்றே பல தப்புகள்
இப்போதும் செய்கிறேன்
தப்புத்தப்பாக தப்பு செய்து
அகப்பட்ட தருணங்களும் உண்டு
அப்போதெல்லாம்
தப்பு செய்யக் கூடாது
என்று தோன்றியதே இல்லை
தப்புத் தப்பாக
தப்பு செய்யக்கூடாது
என்று மட்டுமே தோன்றியது
-ஜெ.நம்பிராஜன்

Thursday, February 7, 2008

முத்தம்

குழந்தையின் உதடுகளில்
எறும்பு கடித்தது போன்ற
பழுத்த உதடுகள் உனக்கு
இதழ் குவித்துப் பேசுகையில்
இதழ்களின் பாதைகளில்
பயணப்படும் என் மனது
இதழ்களின் இடைவெளியில்
இறுக்கப் பட்டிருந்தது
என் உயிர் மூச்சு
இன்னும் கனத்துக் கிடக்கிறது
நெஞ்சில்...
விட்டுப் பிரிகையில்
வெகு கவனமாக
எச்சில் படாமல்
நீ கொடுத்த
அந்த சம்பிரதாய முத்தம்
-ஜெ.நம்பிராஜன்

குழந்தைப்பாட்டு

முயற்சி
சிணுங்குகிறது
கை கால்களை ஆட்டுகிறது
பிறகு அழுகிறது
எதுவும் நடவாத போது
தொட்டிலில் இருந்து
தானே இறங்குகிறது
குழந்தை
கண்ணாமூச்சி
முழுவதும் மறையாமல்
கொஞ்சம் தெரியும்படி
ஒளிய வேண்டியிருக்கிறது
குழந்தைகளுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்

-ஜெ.நம்பிராஜன்

Thursday, January 24, 2008

ஊடலுக்குப் பின்...

அழுது கொண்டிருந்தாய் நீ
அமர்ந்திருந்தேன் நான்
கொஞ்சகொஞ்சமாய்
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட
கண்ணீரில் 'நான்' கரைந்தோட
என்னைத் தொலைத்த நான்
உன்னை மறந்த நீ என
நாமானோம் நாம்.
-ஜெ.நம்பிராஜன்

Wednesday, January 9, 2008

அறியாத வயது

பள்ளி செல்லும் வழியில்
பழுதடைந்து நின்றது பேருந்து
வயல்வெளிச் சாலையில்
இறங்கி நின்ற மழலைகள்
பள்ளியை மறந்து பரவசமாயினர்
குயில்களின் கூவலோடு சேர்ந்தது
குழந்தைகள் குரல்
குழந்தைப் பருவம் தொலைத்த
நடுத்தர வயது ஆசிரியை
எரிச்சலோடு சொன்னாள்
"டோண்ட் டாக்".
-ஜெ.நம்பிராஜன்

Friday, January 4, 2008

ஹேப்பி நியூ இயர்

நள்ளிரவு கேளிக்கைகள்
மதுவிற்க்கு இலவச இணைப்பாக
சிற்றின்பத் தீண்டல்கள்
மிதக்கிறது...நம் பண்பாடு
நட்சத்திர விடுதி
நீச்சல் குளத்தில்
பிணமாக.
-ஜெ.நம்பிராஜன்